skip to main |
skip to sidebar
பள்ளி பருவத்து
நம் முதலாம் வகுப்பில்
வெய்யில் தாகத்தை தணிக்க
தண்ணீர் கேட்டாய் என்னிடம்...
நான் கொடுத்த நீர்
உன் தாகத்தை மட்டும்
தணிக்கவில்லை...
நம்முள் நட்பையும் திணித்தது...
அன்று வேரூன்றிய
நம் நட்பு மரமாய் நம்முள்
வளர்ந்து நிற்கிறது இன்று...
நாம் கவலையின்றி
அரைக்கார் சட்டையுடன்
சுற்றி திரிந்த இடங்களும்...
மிதிவண்டியில் சுற்றிய
வயல் காடுகளும்
திரை அரங்குகளும்
பறை சாற்றுகின்றன
இன்றும் நம் நட்பின் ஆழத்தை...
பள்ளியில் பிரிந்தும்
நம் நட்பு
கல்லூரி காலத்திலும்
நெருக்கமாய் தொடர்ந்தது...
வேலைக்காக இன்று நீ
வெளி நாட்டில் இருந்தும்
குறையவில்லை
நம் நட்பின் ஆழம்...
நீ என்னோடு இல்லாத
இந்த வெற்றிடத்தை
நிரப்ப உன்னையும்
நம் இளைமைக்கால
நினைவுகளையும் தவிர
வேறு எவராலும் முடியாது...
பின்னோக்கி பார்க்கிறேன்
நம் இளமை காலத்தை
ஏக்கத்தோடு...
கடந்து வந்த
வாழ்க்கை பாதையை
பின்னோக்கி பார்க்கிறேன்
நரைத்த தலையோடும்
தளர்ந்த உடலோடும்....
வெகு தொலைவில்
நீ தெரிகிறாய்
நாம் பிரிந்த
இளைமை காலத்தில்....
திரும்பவும் இளமையோடு
உன் கரம் பிடித்து
வாழ்க்கை பாதையை
கடக்க ஆசை....
ஆனாலும் ஒருவழி
பாதையாய் போய்விட்டது
இந்த வாழ்க்கை பயணம்
நாம் சேர வழி இல்லாமல்....
கண்டதும் பல
உறவு பெயர்களில்
அழைத்தார்கள்...
ஆனாலும் இவர்கள்
ரத்தத்தால் வந்த
உறவுகள் அல்ல...
கண்டப்பின் நம்மோடு
உறவாகிப்போனவர்கள்....
இவர்களை
பெற்றவர் யாராயினும்
வளர்வது ஓரிடத்தில்....
இவர்களிடம்
ஜாதி மதங்களை கடந்த
உறவும் பாசமும் நட்பும் தெரிந்தது....
பண்டிகைகள் எல்லாம்
சிறப்பாகின்றன இவர்கள்
கொண்டாடுவதால்....
இவர்கள் அனைவரோடும்
ஒரு வேளை
உணவு உண்டது
வாழ்கையில் செலவு
செய்த பணத்திற்கு
முதன் முதலாக
கிடைத்த சந்தோஷம்....
பிரியும்போது
தோன்றியது என்னுள்
இவர்கள் அனாதைகள்
அல்ல என்று
உறவாக நாமிருக்கும்போது....
பள்ளி கால நண்பர்கள்
அலுவலக பணியின்
தீவிரத்தில் காணாமல் போனார்கள்....
கல்லூரி காதல்
திருமணத்துக்குப்பின்
மறந்துபோனது....
வீடு அலுவலகமென்று
அன்றாட இயந்திர
வாழ்க்கை பழகிப்போனது....
அன்று அப்பாவின் திட்டு
நினைவுக்கு வந்தது
பொறுப்பற்று நண்பர்களுடன்
ஊர் சுற்றுகிறான் என்று...
நாங்கள் இன்றைய இளைஞர்கள்....
நட்டு வைத்த நாற்றுகளுக்கு
நீர் பாசனம் வேண்டி
மழை பெய்ய
காத்திருந்தான் விவசாயி....
அறுவடை பணத்தில்
வீட்டிற்க்கு அரிசி வாங்கவும்
பிள்ளையின் பள்ளி
கட்டணத்தை கட்டவும்
எண்ணமுண்டு....
கருத்த மேகத்தை பார்த்து
புன்னகை தவழ்ந்தது...
அடித்த ஆடி காற்றில்
மேகமும் கலைந்து
கவலையும் தொற்றிகொண்டது....
ஏமாற்றத்துடன் வீடு
திரும்பியவனிடம்
வருண பகவானை
வேண்டுவோம் என்றான் பிள்ளை...
மகனின் நம்பிக்கை
புத்துணர்ச்சி தந்தது
அவனுள் மழை வருமென்று....